எனது உடல்நிலை சரியில்லை.. உற்சாகமாக இல்லையாம்.? சிரிப்பு தான் வருகிறது.. எனக்கு என்ன குறை.? - மு.க.ஸ்டாலின்

எனக்கு மக்களைப் பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர என்னைப் பற்றி இருந்தது இல்லை. எந்த சூழலிலும், மக்களோடு இருப்பவன் நான். என் சக்தியை மீறியும் உழைப்பவன் நான். இதுமாதிரியான செய்திகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, உழைத்துக் கொண்டே இருப்பேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Chief Minister Stalin has denied the information that his health is not good KAK

எனக்கு என்ன குறை.?

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் அயலகத் தமிழர் தினம் 2024 விழாவில், அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர்,  எனக்கு உடல் நலமில்லை. உற்சாகமாக இல்லை..என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதை படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. எனக்கு என்ன குறை? தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றபோது, அதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?

நேற்று ஒரு வீடியோ பார்த்தேன் சென்னையை சேர்ந்த ஒரு சகோதரி பேசுகிறார்கள்.. "கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. அரிசி சர்க்கரை, கரும்பு வந்துவிட்டது... வெள்ள நிவாரணமாக ஆறாயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது. ஒரு மாதத்தில் முதலமைச்சரே எட்டாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டார். 

Chief Minister Stalin has denied the information that his health is not good KAK

பொங்கலுக்கு, யாரையும் நான் எதிர்பார்க்கத் தேவையில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார் அந்த சகோதரி. அவர் முகத்தில் பார்க்கின்ற மகிழ்ச்சிதான் எனக்கான உற்சாக மருந்து! எனக்கு மக்களைப் பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர என்னைப் பற்றி இருந்தது இல்லை. எந்த சூழலிலும், மக்களோடு இருப்பவன் நான். என் சக்தியை மீறியும் உழைப்பவன் நான். இதுமாதிரியான செய்திகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, உழைத்துக் கொண்டே இருப்பேன்! அண்மையில், இதே அரங்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு என்பது. தமிழ்நாட்டை வளப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என்று சொன்னால், இன்று நடைபெறுவது உலகத்தை வளப்படுத்த சென்ற தமிழர்களை கொண்டாடும் மாநாடு!

இந்த மாநாட்டுக்கு கிடைத்த மாபெரும் சிறப்புகளில் ஒன்று சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் மாண்புமிகு சண்முகம் அவர்கள் இங்கு வருகை தந்திருப்பது! அவர், உலகப் புகழ்பெற்ற தமிழன் மட்டுமல்ல, உலகமே கவனிக்கின்ற பதவியில் இருக்கும் தமிழன்! நான் சிங்கப்பூர் சென்றிருந்த போது நான் தங்கிய இடத்திற்கே வந்து, எனக்கு சிறப்பு செய்தார். நேற்று அவரை என்னுடைய வீட்டிற்கே வரவழைத்து மகிழ்ந்தேன். அவரை இன்றும் என்றும் வாழ்த்தி வரவேற்கிறேன். அவரை போலவே, இந்த மேடையில், உலகமெங்கும் பல நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு பொறுப்புகளில் அறிவால், ஆற்றலால் தமிழர்கள் தலைநிமிர்ந்து அனைவரது வருகைக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். மேடையிலும் நேரிலும் அமர்ந்திருக்கும். உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. 

Chief Minister Stalin has denied the information that his health is not good KAK

"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்ற உழைப்புத் திறன்தான் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழக் காரணம்! இப்படி புலம்பெயர்ந்த நம் தமிழ்ச் சொந்தங்கள், அந்த நாடுகளுடைய வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் முதுகெலும்பாக இருந்து வருகிறார்கள். தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் 2010-ஆம் ஆண்டு வெளிநாடுவாழ் தமிழர்களுடைய துயரங்கள் களைய "வெளிநாடுவாழ் தமிழர் நலப்பிரிவு" உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டதோடு, வாரியம் அமைக்கவும் சட்டமுன்வடிவு உருவாக்கப்பட்டது ஆனால், தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றம் காரணமாக இந்த முயற்சிகளில் தடை ஏற்பட்டது. ஆனால், இப்போது அமைந்திருக்கின்ற நம்முடைய திராவிட மாடல் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னபடியே, அயலகத் தமிழர் நலனுக்கென்று தனியாக ஒரு துறையை உருவாக்கி தனி அமைச்சரையும் நியமித்து, உங்களுடைய அவசரத் தேவைகள் உடனுக்குடன் சிறப்பான முறையில் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது


. வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை உள்ள தமிழர்களுடைய குழந்தைகளுக்கு தமிழ் மீது ஆர்வத்தை உருவாக்கி தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலமாக தமிழ் கற்றுத் தரப்படுகிறது. வெளிநாடுகளில் கைது செய்யப்படுகின்ற சூழலுக்கு ஆளாகின்ற தமிழர்களுக்கு உரிய சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அயல்நாடுகளில் உதவி தேவைப்படுகின்ற தமிழர்களுக்கு ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய இந்தியத் தூதரகத்துடன் இணைந்து உரிய நிவாரண நடவடிக்கைகளை இந்தத் துறை சிறப்பாக செய்து வருகிறது. மருத்துவ இயலாமை மற்றும் பல்வேறு காரணங்களால் தாயகம் திரும்ப முடியாமல் கஷ்டப்படுகின்ற தமிழர்களை தாய்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வரவும், அங்கு இறக்க நேரிடும் தமிழர்களின் உடல்களை இந்தியா கொண்டு வரவும், தமிழ்நாடு அரசால் 1 கோடி ரூபாய் சுழல்நிதி ஏற்படுத்தப்பட்டு தமிழர்களுடைய துயரங்களை துடைக்கின்ற பணி உரிய முறையில் செய்யப்பட்டு வருகிறது.

Chief Minister Stalin has denied the information that his health is not good KAK

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் நாள் அயலகத் தமிழர் நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு நாட்களாக உலகத் தமிழினத்தின் மாநாடு போல சீரும் சிறப்புமாக இது நடந்துகொண்டு வருகிறது. "வேர்களைத் தேடி” என்பது இந்த ஆண்டுக்கான முத்தாய்ப்பான திட்டமாக அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் 200 இளைஞர்கள் தேர்ந்தெடுத்துப் பண்பாட்டு சுற்றுலா அழைத்துகொண்டு செல்வதற்கு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இந்த ஆண்டின் அயலகத் தமிழர் நாள் கொண்டாட்டம் "தமிழ் வெல்லும்" என்ற சிறப்பான கருப்பொருளைக் கொண்டு, மிக எழுச்சியோடும், 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து வந்திருக்கின்ற உங்கள் எல்லோருடைய பங்கேற்போடும் மிகச் சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. 

தாய்த் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமில்லாமல், ஒரு தமிழனாகவும் இதை பார்த்து நான் அகம் மகிழ்கிறேன் நீராலும், நிலத்தாலும் ஏன் நாடுகளாலும், கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்! தமிழ் அன்னையின் குழந்தைகள்! அந்த உரிமையுடன் உங்கள் சகோதரனாக நான் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள்.. எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள்! அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள்! கீழடி பொருணை. ஆதிச்சநல்லூரை காட்டுங்கள்! தமிழோடு இணைந்திருங்கள்! நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், நமது திராவிட மாடல் அரசுக்கும் துணையாக இருந்திடுங்கள்! என்று கேட்டுகொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios