விண்வெளிக்கே சென்றாலும் பெண்களால் கருவறைக்குள் செல்ல முடியாது... அந்நிலை இனி இல்லை! - மு.க.ஸ்டாலின்
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்.. என மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.
திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் சேகர்பாபு நேற்று முன் தினம் வழங்கினார். 98 பேரில் 3 பேர் பெண்களும் பயிற்சி முடித்துள்ளனர். மேலும் ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி முடித்த 71 பேருக்கு தற்காலிகமாக திருக்கோயிலில் தலைமை அர்ச்சகரிடம் உதவி அர்ச்சகராக சேர்ந்துள்ளனர். மேலும் இவர்களுக்கு மாதம் 8000 முதல் 10000 ரூபாய் உதவி தொகையாக வழங்கி வருவதாக அறநிலைத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ச்சகர் பயிற்சி அளிக்கும் கல்லூரிகளில் ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா ஆகிய மூன்று பேர் பயிற்சி முடித்துள்ளனர். அர்ச்சகர் பயிற்சியை பெண்கள் முடிப்பது இதுவே முதல் முறை. இந்த நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன.
பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்.. என மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.