தமிழகத்துக்கு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதினார்.

தமிழகத்தில் மழை பொய்த்துவிட்டது. இதனால், விவசாயிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்க கர்நாடகா காவிரி நீர், கேரளம் முல்லை பெரியாறு நீர், ஆந்திரா கிருஷ்ணா நீர் கொண்டு வரப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நதி பங்கீடு பெரும் விவகாரமாக மாறி வருகிறது.

இதற்கிடையில் கடந்த 1983ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் எடுத்த நடவடிக்கையின்பேரில், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு கொண்டு வரப்பட்டது. இதில், 15 டிஎம்சி தண்ணீரை ஆண்டு தோறும் தமிழகத்துக்கு கொடுப்பதாக ஆந்திர அரசு ஒப்பு கொண்டது.

அதன்படி ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதம் முதல் அக்டோபர் பரை 8 டிஎம்சி தண்ணீரும் பூண்டி தேக்கத்துக்கு வந்து சேர்கிறது. 3 டிஎம்சி தண்ணீர் சேதாரமாகிறது.

சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள், காலி குடங்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் குடத்துடன் அலைந்து திரிகின்றனர். இதனால், வரும் கோடை காலத்தில், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, கடிதம் எழுதியுள்ளார். அதில், கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.