Chief Minister of Tamilnadu - Taimunuman Ansari allegation imposed on yoga to cool the central government
நாகப்பட்டினம்
மத்திய அரசை குளிரச் செய்யவே யோகாவை கட்டாயமாக்கித் திணிக்கிறார் முதல்வர் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலர் எம்.தமிமுன் அன்சாரி தெரிவித்து உள்ளார்.
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலர் மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “தமிழக அரசுப் பள்ளிகளில் யோகா வகுப்புகள் கட்டாயமாக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
மத்திய அரசை குளிரச் செய்யும் வகையில் யோகாவை கட்டாயமாக்கித் திணிப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
யோகா என்பது ஒரு உடற்பயிற்சி என்ற அளவில் மட்டுமே இருந்தால் அதை யாரும் குறை கூற மாட்டார்கள். அதை மந்திரங்கள் ஓதி ஒரு மதச் சடங்காக மாற்றி நடைமுறைப்படுத்தும் மறைமுக திட்டங்கள் இருப்பதாலேயே அதை அனைவரும் எதிர்க்கின்றனர்.
பல மதங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பயிலும் பள்ளிக் கூடங்களில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை செயல்படுத்துவதில் எச்சரிக்கை தேவை.
இரண்டு வகையான உடற்பயிற்சிகளை அறிவித்து, அதில் யோகாவும் ஒன்று என்றால் ஆட்சேபணை இல்லை. அதில் இரண்டில் ஒன்றைத் தேர்வுச் செய்யும் உரிமையை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதே நேரம் கற்பிக்கப்படும் யோகாவில் எந்த மதச் சார்பு கருத்துகளும், நடவடிக்கைகளும் சாராமல் அமல்படுத்த வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், தற்போது அறிவித்திருக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.
