படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக்காட்டாகக் காட்டினால், அதற்கு இணையாகப் படித்துச் சாதித்தவர்கள் லட்சம் பேரை நாம் காட்டமுடியும்! 'படிக்காமலே சாதிக்கலாம்' என்று யாராவது சொன்னால், அது தன்னம்பிக்கை ஊட்டுவது அல்ல; அது வெறும் ஆசை வார்த்தை! இவர்களெல்லாம் படித்து முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில் தவறான பாதையை கை காட்டும் சூழ்ச்சி அது! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தொடக்க கல்வி சிறப்பாக அமைய வேண்டும்

கற்றல் இடைவெளியை குறைக்கவும், கற்றல் ஆற்றலை அதிகப்படுத்தவும் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர் எப்படி தாகத்தைப் போக்குகிறதோ, அதேபோல், கல்வியினுடைய தாகத்தை, அந்த அறிவு தாகத்தை தீர்க்கக்கூடிய வகையிலே இந்தத் திட்டம் இங்கு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது, அதனால்தான் கல்விக்கு மிக மிக அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்து, நம்முடைய அரசு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வந்துகொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, கொரோனா வந்த சமயத்தில், ஊரடங்கு பிறப்பித்த நேரத்தில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடு செய்வதற்கும். எதிர்காலத்திற்கு ஏற்ற சிந்தனைத் திறனைக் கல்வியின் மூலமாக அவர்கள் பெறுவதற்கும், பல்வேறு முன்னெடுப்புகளை நாம் தொடர்ந்து எடுத்து வந்து கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் தான், அந்த அடிப்படையில்தான் 'எண்ணும் எழுத்தும்' என்கிற இந்த இயக்கத்தைத் தொடங்கி வைப்பதற்காக இந்த அழிஞ்சிவாக்கத்திற்கு நான் வந்திருக்கிறேன். வழக்கமான படிப்புகள் மட்டும் போதாது. புதிய உத்தி தேவை என்பதை அரசு உணர்ந்ததன் அடிப்படையில் தான். இந்தத் திட்டத்தை நாம் இன்றைக்கு வகுத்திருக்கோம். ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தொடக்கக் கல்வியை வெறும் கல்வியாக மட்டும் பார்க்க முடியாது. அது வாழ்க்கையின் வழிகாட்டியாக, தன்னம்பிக்கையின் தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. இந்தச் சமூகத்தின் திறவுகோலாக ஒவ்வொரு மனிதருக்கும் இருப்பது இந்தத் தொடக்கக் கல்வி! ஒவ்வொரு குழந்தைக்கும் தொடக்கக் கல்வி மட்டும் ஒழுங்காக,முறையாகக் கிடைத்துவிட்டால், அதன் பிறகு நடப்பது அனைத்துமே சிறப்பாக நடக்கும். அதனால்தான், 'திராவிட மாடல்' அரசு 'எண்ணும்எழுத்தும்' என்ற இந்த இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது. 

படிப்பு மட்டுமே முக்கியம்

2025-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது நம்முடைய இலக்கு! 2025-ஆம் ஆண்டுக்குள் எட்டு வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் எண்ணறிவு பெற்றவர்களாகத் திகழ வேண்டும் என்பது நம்முடைய இலக்கு! கல்வி மட்டும்தான் நம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும்! கல்வி மட்டும்தான் நமக்கு மதிப்பைத் தேடித் தரும்! கல்வியால் பெறக்கூடிய பெருமை மட்டும்தான் எதனாலும் அழிக்க கல்வியுரிமை என்பது நாம் போராடிப் பெற்றது! முடியாதது! எனவே. கல்வியின் மீதான ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்! படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக்காட்டாகக் காட்டினால், அதற்கு இணையாகப் படித்துச் சாதித்தவர்கள் லட்சம் பேரை நாம் காட்டமுடியும்! 'படிக்காமலே சாதிக்கலாம்' என்று யாராவது சொன்னால், அது தன்னம்பிக்கை ஊட்டுவது அல்ல; அது வெறும் ஆசை வார்த்தை! இவர்களெல்லாம் படித்து முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில் தவறான பாதையை கை காட்டும் சூழ்ச்சி அது! எனவே, குழந்தைகள் - பள்ளிப் பிள்ளைகள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் என்பது படிப்பு - படிப்பு படிப்பு மட்டும்தான். இதனை முதலமைச்சராக அல்ல ஒரு தந்தையாக உங்களில் ஒருவனாக இருந்து நான் கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.