தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டித்வா புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, டித்வா புயல் காரணமாக அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன்
காணொலிக்காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தெற்கு பகுதிகளிலும், டெல்டா பகுதிகளிலும் கடுமையான மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறார்கள். ரெட் அலர்ட் விடுத்திருக்கும் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக தொடர்பு கொண்டு ஆய்வு மேற்கொண்டோம். ஏற்கெனவே, நேற்றையதினம் இதுகுறித்து என்னுடைய தலைமையில், தலைமைச் செயலாளர் முன்னிலையில் உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தை கூட்டி உரிய அறிவுரை வழங்கியிருக்கிறோம்.
எல்லா மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்பி வைத்திருக்கிறோம். அனைவரும் அவரவர்களுக்குரிய மாவட்டங்களுக்கு சென்றுவிட்டார்கள். ஏற்கெனவே, எந்தெந்த இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றதோ அந்தந்த இடங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறோம். மின் கம்பிகள் எங்கும் அறுந்து விழாமல் விபத்து ஏற்படாமல், கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றோம். எனவே, எச்சரிக்கை செய்யும் அந்த பணியைதான் இன்றைக்கு நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
சென்னையிலும் அதிகம் மழை பெய்யும் என்று சொல்கிறார்கள். தேவையான இடங்களில் முகாம்களும், அங்கு உணவுகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் திறந்துவிடும் நேரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
டெல்டா மாவட்ட மக்களை தமிழக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியது தொடர்பாக அவர் வஞ்சிக்காமல் இருந்தால் போதும். அதான் முக்கியம். அவர் சொல்லிக்கொண்டுதான் இருப்பார். அதுபோன்று எதுவும் கிடையாது. அவர் எப்போதும் அப்படிதான் சொல்லிக்கொண்டு இருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. புயலை எதிர்கொள்ள எல்லாவற்றிலும் தயாராக இருகங்கிறோம் என தெரிவித்துள்ளார்.


