சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அலுவலர் வெளியிட்டார்.

சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2017 இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன்,இன்று  ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள், 2017-ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 2016 அன்று வெளியிடப்பட்டது.

2017 ஜனவரி 1  அன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல்  பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் கடந்த செப். 1 முதல் 30 வரை  பெறப்பட்டன. 

அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டமன்ற தொகுதியினைச் சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் இறுதிபடுத்தப்பட்டது.

  வாக்காளர் பட்டியலை  சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி, உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வையிடலாம்.

 மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பார்த்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுவரை வெளியிடப்பட்ட பட்டியல் படி 16 தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை மொத்தம்  ஆண்கள்- 20,06,036 , பெண்கள் -20,51,598 , மூன்றாம் பாலினம்- 968  மொத்தம்-40,58,602