இனி 2 அரை மணி நேரத்தில் வேலூர் செல்லலாம்.! சூப்பரான திட்டத்தை அறிவித்த மத்திய அரசு
சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலை 40-ல் 28 கி.மீ. தொலைவிற்கு ரூ.1,338 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 வழிச்சாலை, சென்னை, பெங்களூரு, திருப்பதி மற்றும் வேலூர் இணைப்பை மேம்படுத்தும்.
சாலை போக்குவரத்து திட்டம்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக உட்கட்டமைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்தும் அதிகமாகியுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் அகலப்படுத்தப்பட்டும், புதிய சாலைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஊருக்கு 24 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதை தற்போது 12 மணி நேரத்திற்குள்ளாக செல்லும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதிலும் சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் 4 வழிச்சாலை, 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக உரிய இடத்திற்கு மக்கள் சென்று சேர முடிகிறது.
சென்னை- வேலூர் தேசிய நெடுஞ்சாலை
அந்த வகையில் சென்னையில் இருந்து வேலூர் வரை செல்லக்கூடிய சாலையில் கடந்த பல ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலை பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் 3 மணி நேரத்தில் வேலூருக்கு செல்லும் நிலை மாறி 4 மணி நேரம் வரை கூடுதல் நேரம் நேரம் எடுக்கிறது. எனவே சாலைப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்கரி வெளியிட்டுள்ள பதிவில்,
1338 கோடி ஒதுக்கிய மத்திய அரசு
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை 40 இல் வாலாஜாபேட்டை/ ராணிப்பேட்டையில் இருந்து தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லை வரை 28 கிமீ தொலைவிலான நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு 1,338 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நெடுஞ்சாலையானது 4-வழி பிரதான சாலை இருபுறமும் 2-வழிச் சாலைகளைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாலாஜாபேட்டை - ராணிப்பேட்டைக்கு இடையே 10 கிமீட்டருக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் எனவும், இதில் 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொழில்களை ஊக்குவிக்கும் திட்டம்
இந்த தேசிய நெடுஞ்சாலையானது சென்னை மற்றும் பெங்களூரு, திருப்பதி மற்றும் வேலூர் போன்ற நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை திட்டத்தின் மூலம் புகழ்பெற்ற சிஎம்சி-வேலூர் மருத்துவமனை, BHEL நிறுவனம், தோல் மற்றும் சிறிய அளவிலான பொறியியல் பிரிவுகள் உட்பட உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்க வழிவகுக்கும் என கூறியுள்ளார். ராணிப்பேட்டையில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் 2025 ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், இந்தத் சாலை திட்டம் கணிசமான பொருளாதார வளர்ச்சியைக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் 2-வழிச் சேவை சாலைகளுடன் உள்ளூர் போக்குவரத்து இயக்கத்தை உறுதி செய்கிறது என கூறியுள்ளார்.