ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டிருப்பது "வந்தாரை வாழ வைக்கும்" தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.

சென்னையில் பீகார் மாநில இளைஞரும், அவரது மனைவி மற்றும் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதுதான் பெண்கள் பாதுகாப்பின் லட்சணமா? என்று இபிஎஸ், அன்புமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இபிஎஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார் , அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

மதுபோதையில் வெறிபிடித்த கும்பல் ஒன்று கவுரின் மனைவியை வன்கொடுமை செய்து கொன்றிருப்பதும், அதை தடுக்க வந்த கணவரை கொலை செய்திருப்பதும், அதனைத் தொடர்ந்து அவர்களது 2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்றிருப்பதும் கொடூரத்தின் உச்சம். சில நாட்களுக்கு முன்பு தான் திருத்தணியில் மகாராஷ்டிரா மாநில இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேரலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டிருப்பது "வந்தாரை வாழ வைக்கும்" தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.

பொம்மை முதலமைச்சர்

மனித குலத்திற்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், யாருக்கும் பாதுகாப்பற்ற, மோசமான ஆட்சியை நடத்தி வரும் விடியா திமுக அரசிற்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதை போல் வாய்ச்சவடால் பேசும் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கொலைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் பொம்மை முதல்வர்?. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

அன்புணியும் கண்டனம்

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''சென்னை அடையாறு பகுதியில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கொண்ட கும்பல், அதைத் தடுக்க வந்த அவரது கணவர், 2 வயது குழந்தை ஆகியோரை படுகொலை செய்ததுடன், இளம்பெண்ணையும் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறது. அமைதியான நகரம் என்று பெயர் பெற்ற சென்னையை வாழத்தகுதியற்ற கொலைநகரமாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மு.க. ஸ்டாலினுக்கு நா கூசவில்லையா?

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடிய 48 மணி நேரத்திற்குள் இந்தக் கொடூரம் குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது. இவ்வளவு மோசமான ஆட்சியை நடத்திக் கொண்டு, தமிழ்நாடு தான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் என்று கூறுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நா கூசவில்லையா? 

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமான கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பொருள்களை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று கூறியுள்ளார்.