சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலில் அடிபட்டு 2 பேர் உயிரிழந்தனர். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரயிலில் அடிபட்டு முனிவேல், கிஷோர்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். புறநகர் ரயிலான கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இன்று காலை மின்சார ரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையம் வந்த போது 2 பேர் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

 

அப்போது கண்யிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது ரயில் மோதியது. இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இருவரும் சாஸ்திரி நகரை சேர்ந்த முனிவேல், கிஷோர்குமார் ஆகியோர் என தெரியவந்தது. இவர்களது உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இது போன்று விபத்துகள் ஏற்படாத வகையில் ரயில் நிலையங்களில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் இதேபோன்று பரங்கிமலையில் மின்சார ரயிலில் அடிப்பட்டு 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.