சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பள்ளி முதல் காவல் நிலையம் வரை பெண்கள் மீதான பாலியல் சீண்டல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 23.12.24 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை, 01.02.25 அன்று சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உதவி கேட்டு வந்த 13 வயது சிறுமிக்கு மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் பாலியல் தொல்லை, 14.01.25 அன்று மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 18.01.25 அன்று கரூரில் பள்ளி மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை, 21.01.25 அன்று திருப்பூரில் அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை, 03.02.25 சேலம் தலைவாசலில் பள்ளி மாணவிக்கு முதியவர் பாலியல் தொல்லை, 05.02.25 அன்று கலைஞர் பேருந்து நிலையத்தில் நின்ற 19 வயது பெண் பாலியல் துன்புறுத்தல், 06.02.25 அன்று வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: டெபாசிட் இழப்பது தானே உங்கள் தேர்தல் வியூகம்! மைக்கை நீட்டினாலே உளறும் திரள்நிதி சீமான்! அலறவிடும் தவெக!

சென்னை காவல் துறையில் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக பணிபுரிந்து வந்தவர் மகேஷ் குமார் ஐபிஎஸ். இவர் மீது போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் புகாரில் இணை ஆணையர் மகேஷ்குமார் பாலியல் ரீதியாக சில தினங்களாக தனக்கு தொந்தரவு கொடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, பெண் காவலரின் புகாரின் அடிப்படையில் டிஜிபி உத்தரவின் பேரில் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் விசாகா கமிட்டி நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண் காவலர் கொடுத்த புகார் உறுதியானது. இது தொடர்பாக முதல் கட்ட விசாரணை அறிக்கையும் டிஜிபி அலுவலகத்தில் விசாகா கமிட்டி சமர்ப்பித்தது.

இதையும் படிங்க: கடலூரில் உருவான காதல்! நொடியில் வண்டலூரில் முடிந்த சோகம்! நடந்தது என்ன? நெஞ்சில் அடித்து கதறும் பெற்றோர்!

அதன் அடிப்படையில் போக்குவரத்து வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமார் ஐபிஎஸ் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டு துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகேஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலியல் புகாரில் காவல்துறை இணை ஆணையரே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.