கிழக்கு தாம்பரத்தில் அதிவேகமாக இயக்கிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.  

திருவான்மியூரில் இருந்து கிழக்கு தாம்பரத்திற்கு நேற்று மதியம் 3 மணிக்கு மாநகர பேருந்து ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது.  அப்போது பேருந்தை ஓட்டுநர் விஜயராஜா (38) ஓட்டி வந்தார். பேருந்து வேளச்சேரி அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்தது. 

சாலையில் பேருந்து தறிகெட்டு ஓடியது. சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தை இடித்து அங்க நின்ற கார் மீது மோதிவிட்டு, மின்வாரிய அலுவலகத்தில் புகுந்தது. இதில் 5 இருசக்கர வாகனங்கள் பேருந்தின் அடியில் சிக்கி சேதமடைந்தன. மேலும் அங்கிருந்த மதில் சுவரும் இடிந்து விழுந்தது. ஆனால் அதிஷ்டவசமாக நேற்று விடுமுறை என்பதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகளும் காயமின்றி தப்பித்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.