சென்னை ஒன் செயலி மூலம் மெட்ரோ ரயில், பறக்கும் ரயில், மாநகரப் பேருந்தில் வெறும் ரூ.1 செலுத்து பயணம் செய்யும் திட்டம் இன்று அறிமுகமானது. இத்திட்டத்தில் பயணிகள் ஒரு முறை மட்டும் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு. 

சென்னையில் பொது போக்கவரத்தை் ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் சார்பில் உருவாக்கப்பட்ட சென்னை ஒன் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். ஐஓஎஸ் மற்றம் ஆண்ட்ராய்ட் தளங்களில் செயல்படக் கூடிய இந்த செயலி மூலம் மாநகரப் பேருந்து. மெட்ரோ ரயில், பறக்கும் ரயில்களில் பயணம் செய்வதற்கான பயணச் சீட்டை இந்த செயலில் பெறலாம்.

சென்னையில் பல்வேறு போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் மக்களுக்கு இந்த ஆப் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. டிக்கெட் கவுண்டர்களில் செலவாகும் நேரத்தை மிச்சப்படுத்துவதால் இத்திட்டத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

இத்திட்டம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெறும் ரூ.1க்கு இச்சேவையை பயன்படுத்தும் வகையில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பிஎச்ஐஎம் பேமெண்ட் அல்லது நவி யபிஐ பேமெண்ட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும்.

இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த சென்னை ஒன் செயலியை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என 4 மொழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.