சென்னை ஐஐடியில் கடந்த 2020 ஆம் ஆண்டு பட்டியலின மாணவி, உதவி பேராசிரியர் மற்றும் மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுப்பிரமணியனை சிறப்பு விசாரணை அதிகாரியாக தமிழ்நாடு காவல்துறை நியமித்துள்ளது
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பட்டியலின மாணவி கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை படித்து வந்துள்ளார்.அவரை 3 மாணவர்கள் உட்பட 8 பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் துறை சார்ந்த பேராசிரியர் எடமன பிரசாத்திடம் புகாரளித்துள்ளார்.புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காத பேராசிரியர் பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவியை சாதி ரீதியாக அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவர்கள், தங்களை தட்டிக்கேட்க யாருமில்லை என்று அறிந்து தொடர்ந்து 2 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் அந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கின்றனர்.
தொடர் பாலியல் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஐஐடி புகார் கமிட்டியிடம் கடந்த 2020 ஆம் ஆண்டு தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த ஐஐடி நிர்வாகம், மாணவியின் புகாரில் உண்மை இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. அதில், பாதிக்கப்பட்ட மாணவியுடன் ஆராய்ச்சி படித்து வந்த கிங்ஷுக் தேப்சர்மா மற்றும் மூன்று பேர் வளாகத்திற்குள் மாணவியை கடுமையாக துன்புறுத்தியதாகவும் கிங்ஷுக் தேப்சர்மா என்பவர் அந்த மாணவியை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், இரண்டு முறை பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்ததாக கூறப்படுகிறது.பேராசிரியரிடமும், ஐஐடி புகார் கமிட்டியிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனம் உடைந்த மாணவி 3 முறை தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இதனை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்திடமும், மயிலாப்பூர் காவல் நிலையத்திலும் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்துள்ளார். ஆனால் அங்கு சென்றும் மாணவியின் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இறுதியாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்திடம் புகார் கொடுத்த நிலையில், விசாரித்த மாதர் சங்கத்தினர், செய்தியாளர்களை சந்திப்பில் மாணவி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பகீரங்கமாக குற்றம் சாட்டினர். மேலும் மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமால், 10 மாதங்களுக்கு மேலாக வழக்கை கிடப்பில் போடப்பட்டதாக, சம்பந்தப்பட்ட மாணவர்கள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், மயிலாப்பூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. தொடர்ந்து இந்த வழக்கை கையில் எடுத்த சென்னை காவல்துறை, மேற்கு வங்கத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வந்த 30 வயதான ஐஐடி முன்னாள் மாணவர் கிங்ஸ் தேப்சர்மாவை கைது செய்தது. மேலும் இந்த புகார் குறித்து துறைமுகம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே ஐஐடி மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை அதிகாரியை தமிழ்நாடு காவல்துறை நியமனம் செய்துள்ளது. கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
