chennai high court age is 125

சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்தின் 125வது ஆண்டு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா. அப்போது அவர், “தமிழக நீதிமன்றங்களில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பல சிறப்பு மிக்க தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நீதியை எதிர்பார்த்தவர்களுக்கு உயர் நீதிமன்றம் ஒரு கலங்கரை விளக்கமாகவே திகழ்கிறது. நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், நீதி விரைவாகக் கிடைக்கும்” என்று பேசினார்.

பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை உயர் நீதிமன்றம் என்று உள்ளதை, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்யும்படி, மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை அனுப்பி வைத்தார் என்று கூறிய முதல்வர், வழக்கறிஞர் சேம நல நிதி ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் என்று கூறினார்.

நீதித்துறைக்கென உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகக் கூறிய அவர், நீதி என்பது அரசியல் சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை என்றும், தமிழகத்தில் நீதிமன்றங்களுக்கு கட்டடங்கள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளித்து, வசதிகளைச் செய்து கொடுப்பதில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் கூறினார்.