நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்ட பாலம் சேதமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணையில், அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஏன் தனி அமைச்சகம் அமைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த சோழசிரமணி - ஈரோடு மாவட்டம் பாசூர் இடையே காவிரி ஆற்றின் மீது 30 அடி அகலம் கொண்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு பாலத்தின் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. கதவணையில் மின் உற்பத்தியும் துவங்கப்பட்டது.

இந்த பாலத்தின் வழியாக தினம் தோறும் அரசு பேருந்துகள், பள்ளி - கல்லூரி பேருந்துகள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

தற்போது காவிரியில் முற்றிலும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் நிலையில், பாலத்தின் 3 வது கான்கிரிட் தூணில் பாதிக்குமேல் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தல் தொங்குவது போன்று வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

இது தொடர்பான செய்திகள், வாட்ஸ்அப்-ல் வெளியானதை அடுத்து, இதனை பொது நல வழக்காக விசாரிக்க நீதிபதி கிருபாகரன் கோரிக்கை வைத்திருந்தார். நீதிபதி கிருபாகரனின் கோரிக்கையை ஏற்று தாமாக முன் வந்த உயர்நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தியது.

வழக்கு விசாரணையின்போது, அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஏன் தனி அமைச்சகம் அமைக்கக்கூடாது என கேள்வி எழுப்பியது. 

2013 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பாலம் சிதிலமடைந்ததற்கு என்ன காரணம்? கட்டுமான பொருட்கள் தரமற்றவையா? நாமக்கல் பாலம் கட்ட எவ்வளவு செலவு செய்யப்பட்டது? பாலத்தின் நிலைக்கு கட்டுமானம் காரணமா? மோசமான பராமரிப்பு காரணமா? பாலம் கட்ட எவ்வளவு செலவு செய்யப்பட்டது? கட்டுமான பணிகள் பின்பற்றப்பட்டுள்ளதா? அல்லது மணல் அல்லப்பட்டதால் தூண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா?  என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பாலங்களை ஐஐடி பேராசிரியர்களைக் கொண்டு ஏன் ஆய்வு செய்யக் கூடாது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இது குறித்து 6 வாரங்களில், தமிழக அரசு, பொதுப்பணித்துறை, தலைமைச் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.