கும்மிடிப்பூண்டி அருகே, முன் விரோதம் காரணமாக மீனவ மக்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் வீடுகள் சூறையாடப்பட்டன. 12 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த வெள்ளம்பேடு மீனவ கிராமத்தில், இரு தரப்புக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று இரவு, சத்திரத்தான் என்பவரின் ஆதரவாளர்களுக்கும், எல்லையப்பன் என்பவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். சத்திரத்தான் என்பவரின் ஆதரவாளர்கள் எதிர்த்தரப்பினரின் வீடுகளை சூறையாடியதாக கூறப்படுகிறது. இதில், பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 12 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம்பேடு கிராமத்தில், தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு கலவரத்தை தூண்டியதாக, சத்திரத்தான் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
