சென்னை போரூர் அருகே தனியாருக்கு சொந்தமான வாகனம் நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடத்தில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகின. மேலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். 

சென்னை போரூர் அருகே ராமசந்திரா மருத்துவமனை எதிரே உட்டோ என்ற கால்டாக்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கார்கள் அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் தான் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த கார் நிறுத்துமிடத்திற்கு பரவியதாக கூறப்படுகிறது. அதை உடனடியாக அணைக்காமல் அலட்சியத்தின் காரணமாகவே அருகில் இருந்த கார் நிறுத்துமிடத்தில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு கார் மீது தீப்பற்றியவுடன் அருகில் இருந்த கார்களில் தீ மளமளவென பரவியது. இதில் 100-க்கும் மேற்பட்ட கார்களில் தீ வேகமாக பரவியது. 

இதனால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த 2 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாததால் மேலும் பூந்தமல்லி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. கார்களின் டயர்கள் அடுத்தடுத்து வெடிப்பதால் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எத்தனை கார்கள் எரிந்து சேதமுற்றன என்ற தகவல் முழுமையாக வெளிவரவில்லை. 

முன்னதாக நேற்று பெங்களூருவில் நடைபெற்று வரும் ‘ஏரோ இந்தியா 2019’ சர்வதேச விமான‌க் கண்காட்சியின் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட கார்களும் 100-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் எரிந்து நாசமானது. இந்நிலையில் சென்னையிலும் அடுத்தநாளே அதேபோன்ற மற்றொரு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.