சொத்து வரி கட்டாததால் ராம்கி-நிரோஷா வீட்டுக்கு, சென்னை மாநகராட்சி ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு வாரத்துக்குள் சொத்து வரி செலுத்தப்படவில்லை என்றால் வீடு ஜப்தி செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

சின்னப்பூவே மெல்லப்பேசு என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ராம்கி, அதன் பிறகு, செந்தூரப்பூவே, பறவைகள் பலவிதம், இது எங்கள் நீதி, இணைந்த கைகள் என பல்வேறு படிங்களில் நடித்துள்ளார். எண்பதுகளில் இளம் பெண்களின் நாயகனாக திரைத்துறையில் வலம் வந்தவர் நடிகர் ராம்கி.

நடிகர் ராம்கியுடன் ஏராளமான படிங்களில் நடித்து வந்த நடிகை நிரோஷா பின்பு அவரையே திருமணம் செய்து கொண்டார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் இவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக சினிமாவில் தலைக்காட்டாத ராம்கி, சமீப காலமாக படங்களில் நடித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள தனது சகோதரரை பார்க்க அடிக்கடி சென்று வந்த ராம்கி, இங்கிலீஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு வந்தார். 

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ராம்கி - நிரோஷாவின் வீட்டுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத காரணத்தால், ராம்கிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக ரூ.1.17 லட்சம் அளவுக்கு சொத்து வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது ராம்கியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவரது இல்லத்தில் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

சொத்து வரி செலுத்தாததை அடுத்து, மாநகராட்சி பல முறை நோட்டீஸ் அனுட்பபியும் ராம்கி தரப்பில் இருந்து வரி செலுத்தப்படவில்லை. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியால் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் வரியை செலுத்துவில்லை என்றால் வீடு ஜப்தி செய்யப்படும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராம்கியின் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் அகற்றப்பட்டுள்ளது.