சென்னையில் எந்தக் கட்சி இங்கு வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக..
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னை மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரத்தின் படி சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 8 இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது. வேறு எந்தக் கட்சியும் இன்னும் கணக்கை தொடங்கவில்லை.
சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே எம்.எல்.ஏக்களாக உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் 90% இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது. சென்னை மேயர் பொறுப்பிற்கு உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசின் அரசாணை அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இருப்பினும் திமுகவின் முன்னணி தலைவர்களாக பொறுப்பு வகித்த வாரிசுகள் இத்தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர்.
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும் சென்னை திமுகவின் முகமாகவும் விளங்கிய முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் பரிதி இளம் சுருதி 99ஆவது வார்டிலும் மறைந்த திமுக மாவட்ட செயலாளரும் சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் இருந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன், 141ஆவது வார்டிலும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்பு பட்டியல் இன பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் துணை மேயர் பொறுப்பு பொதுப்பிரிவை சேர்ந்த ஒருவருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட 16 வார்டுகளில் இருந்துதான் சென்னை மேயர் தேர்வு செய்யப்பட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேயர் தேர்வு என்பது இந்த முறை மறைமுகத் தேர்தலாக நடத்தப்படும் என்பதால் ஆளும் கட்சியான திமுகவை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரே சென்னை மேயராக பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது..
எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.
