Chennai Cop Shot Dead While Chasing Suspected Robbers In Rajasthan

சென்னை மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டியன் இன்று அதிகாலை 2.20 மணி அளவில், ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சென்னையில் நகைக்கடை ஒன்றில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் இடம்பெற்றிருந்த பெரிய பாண்டியன், கொள்ளையர்களில் ஒருவரான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

ஆனால், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட விதம் குறித்து வெளியான தகவல்களில் குழப்பம் நிலவுகிறது. இது குறித்து முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டபோது, மாநிலத் தலைநகர் ஜெய்பூரில் இருந்து 238 கி.மீ. தொலைவில் பாலி பகுதியில் உள்ள ஜெய்தாரன், ராம்புரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையர்கள் இருப்பது அறிந்து அதிகாலை 2.20 மணி அளவில் வீட்டினுள் புகுந்து அவர்களைக் கைது செய்யச் சென்றனராம். கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றபோது அறைக்குள் இருந்த கொள்ளையர்கள் போலீஸாரை சரமாரியாக சுட்டதாகவும் அதில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உயிர் இழந்ததாகவும் சென்னை காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வட நாட்டு ஊடகங்களில் வெளியான செய்திகளில்... ராஜஸ்தானில் ஏழு பேர் கொண்ட தமிழக போலீஸார் ஒரு குழுவாகச் சென்றனர். அவர்களுக்கு கொள்ளையர்கள் இருப்பிடம் குறித்த தகவல் கிடைத்தபோது, அவர்கள் அந்தப் பாலை நிலப் பகுதியில் உள்ள செங்கல் சூளை பகுதியில் மறைந்திருப்பதாகக் கூறப்பட்டது. எனவே, அதற்குத் தயாரான நிலையில்தான் இவர்கள் சென்றிருக்கிறார்கள். ஒருவாறு சமாளித்து, அந்த அதிகாலை 2.20 மணி அளவில் கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்து விட்டார்கள்.

அவர்களைப் பிடித்துக் கொண்டு, செங்கல் சூளையை விட்டு வெளியே வந்தபோது, கொள்ளையர்களில் ஒருவன், இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் இடுப்பில் இருந்த துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு, காம்பவுண்டை விட்டு ஏறிக் குதித்து தப்பினானாம். அப்போது, அவன் அதை வைத்தே பெரியபாண்டியனை சுட்டானாம். அதில், பெரிய பாண்டியன் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், அதே துப்பாக்கியால் அந்தக் கொள்ளையன் மற்ற போலீஸாரையும் சுட்டுள்ளான். இதில் காயமடைந்த போலீஸாரை அருகில் உள்ள மருத்துவமனைகளில் உடனே சேர்த்துள்ளனர். 

இப்படி இருவேறு தகவல்கள் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பது, ராஜஸ்தான் சென்றுள்ள சிறப்பு தனிப்படை போலீசாரிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என்கிறார்கள். 

இதனிடையே, அந்தக் கொள்ளையன் பெயர் நாதுராம் என்றும், அவனின் உறவினர்களும் தமிழக போலீஸாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனைப் பிடிக்க ராஜஸ்தான் போலீஸாரும் தீவிரம் காட்டி களத்தில் இறங்கியுள்ளனர்.