முன்னாள் காதலனைக் கொல்ல இன்னாள் காதலனை அனுப்பிய கல்லூரி மாணவி. உயிர் தப்பிய முன்னாள் காதலன்

சென்னையைச் சேர்ந்தவர் கீர்த்தனா. கல்லூரி மாணவியான இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக கோபி என்பவரை காதலித்து வந்தார். கோபிக்கும், கீர்த்தனாவுக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

கோபியின் பிரிவைத் தாங்க முடியாத கீர்த்தனா, மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கீர்த்தனா, சரத்குமார் என்பவரை சந்தித்துள்ளார். கடந்த சில மாதங்களாக நட்பாக பழகி வந்த அவர்கள், காதலர்களாக மாறியுள்ளனர்.

இந்த நிலையில், கீர்த்தனா சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் காதலனான கோபி அவரை கேலி செய்துள்ளார். இதில் கீர்த்தனா ஆத்திரமடைந்துள்ளார். இதையடுத்து, கோபியைக் கொல்ல சரத்குமாரை தூண்டியதாக தெரிகிறது. 

காதலி கீர்த்தனா கூறியதை கேட்ட சரத்குமாரும், தனது நண்பர்களுடன் சேர்ந்து கோபியை கொல்ல முடிவெடுத்துள்ளார். இதற்காக கத்தி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன், கோபியைத் தாக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார் சரத்குமார்.

சரத்குமார் வருவதை தெரிந்து கொண்ட கோபி, அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். கோபியை விடாமல் துரத்திய சரத்குமார் உள்ளிட்டோர் கோபி மீது வெடிகுண்டை வீசியுள்ளனர். ஆனால், கோபி உயிர் தப்பியுள்ளார்.

வெடிகுண்டு சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.