சென்னை அயனாவரத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த  எஸ்.ஐ. சதீஷ் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. 

சென்னை அயனாவரத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ் இவர் நேற்று இரவு பணியில் இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை பணியில் இருந்த சதீஷ் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

சதீஷ் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மேலையூரைச் சேர்ந்தவர் . 2011-ம் ஆண்டு நேரிடையாக எஸ்.ஐ.யாக தேர்வு செய்யப்பட்டவர் என்றும் அவர் டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். இரவு நேர பணியில் இருந்த போது காவல் நிலையத்தின் நுழைவு வாயிலில் நின்று துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை என கடிதம் எழுதி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்னதாக மதுரையை சேர்ந்த ஆயுதப்படை காவலர் அருள் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஒருவர் மேலும் தற்கொலை செய்துகொண்டது சக காவலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

தகவலறிந்து அங்கு வந்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்.  தற்கொலை செய்து கொண்ட எஸ்.ஐ. சதீஷ் குமார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்