குமுளி,

பத்தினம்திட்டா அருகே குரங்கின் மீதும், வேட்டையாடச் சென்ற சிறுத்தையின் மீதும் 11 கிலோவாட் மின்சாரம் பாய்ந்து பலியாகின.

பத்தினம்திட்டா மாவட்டம் சீனத்தோடு பச்சனகானம் வனப்பகுதியில் ஒரு சிறுத்தையும், குரங்கும் மடிந்து கிடந்தன. அந்த வழியாக விறகு சேகரிக்கச் சென்ற தொழிலாளர்கள் அவற்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர், சிறுத்தை, குரங்கின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவை மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.

இதையடுத்து குரங்கின் உடல் வனப்பகுதியிலேயே புதைகப்பட்டது. மேலும் சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேக்கடி புலிகள் பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குமுளி கால்நடை மருத்துவர் பார்த்திபன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிறுத்தையின் உடலை உடல் கூராய்வு செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘பச்சனகானம் பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக வண்டிப்பெரியார் பகுதிக்கு 11 கிலோவாட் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

வனப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கை வேட்டையாட சிறுத்தை விரட்டியுள்ளது. இதனால் சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க அந்த குரங்கு மரத்தில் ஏறியுள்ளது.

அதனை பிடிப்பதற்காக சிறுத்தையும் மரத்தில் ஏறியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து சிறுத்தையும், குரங்கும் இறந்துள்ளது’ என்று தெரிவித்தனர்.