தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 14ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னையில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. பின்பனிக்காலம் என்பதால், கடந்த சில நாள்களாக சென்னையில் அதிகாலை வேளையில் கடும் குளிரும், பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவும் காணப்படுகிறது. 

இந்நிலையில் இன்று மலை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரி கடல் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 14-ம் தேதி வரையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வை பொறுத்து மழை வலுப்பெறுமா? என்பது தெரியவரும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்’’ என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் சைதாப்பேட்டை, வடபழநி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.