ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்புள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்புள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலங்களான கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கோரொனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்கு உள்ளனாவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது வரையில் முதல் தவணை தடுப்பு ஊசி போடாத சுமார் 50 இலட்சம் நபர்கள் மற்றும் 2ஆம் தவணை தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி நபர்களை கண்டறிந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து அப்பகுதிகளில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட கூடிய மெகா தடுப்பு ஊசி முகாம்களை முழுமையாக பயன்படுத்தி தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்புள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் இன்று 26வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 50,61,287 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.34 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். செங்கல்பட்டு, கோவை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 100% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி சாதனை புரிந்துள்ளது. 99% முதல் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டு, மாநகராட்சிகளில் முதன்மையானதாக சென்னை மாநகராட்சி விளங்குகிறது. அதாவது, சென்னையில் இதுவரை 99% பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் மற்றும் 81% பேர் 2வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் 100% இலக்கை நோக்கி தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலக நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்புள்ளது. 4வது அலையை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று தெரிவித்தார்.
