தி.நகர் ரமணன் தெருவில் வசிப்பவர் அர்ச்சனா(34). இவர் நேற்று மதியம் தனது வீட்டு வாசல் முன்னால் நின்று கொண்டிருந்தார் . ஜனநடமாட்டம் அதிகம் இருந்த நேரம். அப்போது இரண்டு டிப்டாப் ஆசாமிகள் சாலையில் நடந்து வந்தனர். 

அவர்கள் கையில் ஒரு பேப்பரை வைத்துகொண்டு ஏதோ அட்ரஸ் தேடுவது போல் பார்த்துகொண்டு வந்தனர். அர்ச்சனா அருகில் வந்த போது மேடத்திடம் கேளு இதே ஏரியா எனபதால் அட்ரஸ் தெரியும் என்று ஒருவன் சொல்ல மற்றொருவன் வணக்கம் மேடம் இந்த விலாசம் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா ? யார் யாரிடமெல்லாம் கேட்கிறோம் சரியா சொல்ல தெரியல என்று கூறி துண்டு பேப்பரை அர்ச்சனாவிடம் கொடுத்துள்ளான். 

அவரும் ஏதோ அட்ரஸ் தெரியாமல் வழி கேட்கிறார்கள் என்று நினைத்துகொண்டு பேப்பரை வாங்கி பார்த்துள்ளார். பின்னர் அந்த அட்ரசுக்கு வழி சொல்லி இருக்கிறார். அவரிடம் சந்தேகம் கேட்பது போல் ஒரு ஆசாமி  துருவி துருவி கேட்க பேச்சு சுவாரஸ்யத்தில் அர்ச்சனா அட்ரஸ் சொல்வதில் இருக்க அருகில் சும்மா நின்று கொண்டிருந்த ஆசாமி படக்கென்று அர்ச்சனா கழுத்திலிருந்த 10 பவுன் செயினை பறித்து கொண்டு ஓடினான் . இதை பார்த்து அர்ச்சனா கூச்சல் போட உடன் வந்தவன் அவனை விரட்டுவது போல் கூடவே ஓடி மறைந்துவிட்டான்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட நிகழ்வால் அர்ச்சனா அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தவர் விபரம் கேட்டு பாண்டிபசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர்.  

இது பற்றி பாண்டிபசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் கழுத்தில் நகையுடன் செல்லும் பெண்கள் சகல விதத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் , மறந்தும் அஜாக்கிரதையாக இருந்துவிடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர்.