தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்இருந்து ஒரு பைக், 10 சவரன் நகை, 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு, வண்ணாரப்பேட்டை ஜிஏ ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த 3 பேர், போலீசாரை கண்டதும், வேகமாக சென்றனர்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர்களை விரட்டிசென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து 3 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த சரத்குமார் (28), எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ராஜசேகர் (27), வேணுகோபால் (26) என தெரிந்தது.

மேலும் விசாரணையில், வடசென்னை பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி,பெரம்பூர், கொருக்குப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு ஆகிய பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு, கத்தியை காட்டி வழிப்பறி, வீடுகளை உடைத்து கொள்ளையடித்து உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்படி 10 சவரன் நகை, 4 செல்போன், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.