chain snatched from an old lady in nellai collector office

போலீஸ் பாதுகாப்பு மிகுந்த ஆட்சியர் வளாகத்துக்குள்ளேயே மூதாட்டி ஒருவரிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இசக்கிமுத்து என்பவர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கொடுமை காரணமாக இசக்கிமுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பலத்த சோதனைக்குப் பிறகே, ஆட்சியரிடம் அனுமதிக்கப்படுகிறார்கள். வாகனங்கள், நுழையவும் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த நிலையில், நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஜெயமணி என்பவர், ஆட்சியரிடம் மனு ஒன்றை அளிக்க வந்திருந்தார். முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்காக ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக ஜெயமணி வந்திருந்தார்.

ஆட்சியரிடம் மனு அளித்த ஜெயமணி, கூட்ட அரங்கத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது, அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் நகை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்டத்திற்கு வந்தவர்கள் யாரோ, தனது 3 சவரன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து, ஜெயமணி, போலீசாரிடம் புகார் அளித்தார். 

கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள ஆட்சியர் வளாகத்தின் உள்ளேயே மூதாட்டி ஒருவரிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.