சட்ட விரோதமாக பணம் பெற்ற வழக்கில் சிபிஐ விசாரணையில் இருந்து கார்த்தி சிதம்பரம் தப்பி விட கூடாது என்பதற்காகவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது என மத்திய உள்துறை அமைச்சகம் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், 2007-08 ஆம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாத சான்றிதழ் பெற்றுத்தருவதாக கூறி, மொரிஷியசில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பபட்டது. இதை எதிர்த்து அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதைதொடர்ந்து சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவு பிறப்பித்தது.

தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மல்லையாவை போல் கார்த்தி சிதம்பரமும் தப்ப முயற்சி செய்யக்கூடாது என்பதாலும், இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக வில்லை எனவும் மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கு மல்லையாவுடன் ஒப்பிட்டு பேச கூடாது என கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.