central Govt grants additional relief to Kanyakumari - GK Vasan ...

விழுப்புரம்

கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, கூடுதல் நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரசு தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

விழுப்புரத்தில் தமிழ் மாநில காங்கிரசு தலைவர் ஜி.கே.வாசன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், "இராஜஸ்தான் மாநிலத்தில் குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் வேதனையை அளிக்கிறது.

இனிவரும் காலங்களில், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் தனிப்படையினருக்கு, அந்த மாநில காவலாளர்கள் துணை நிற்பதை தமிழக டிஜிபி உறுதி செய்ய வேண்டும்.

கன்னியாகுமரியில் புயல் பாதிப்பு சீரமைப்புப் பணிகளை தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும். மறு சீரமைப்புக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.25 கோடி நிதி போதுமானதல்ல. கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, கூடுதல் நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.

அதிக கப்பல்கள், ஹெலிகாப்டர்களை ஆழ்கடலில் நெடுந்தொலைவு வரை கொண்டு சென்று மீனவர்களைத் தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

புதுக்கோட்டை ஜெகதாப்பட்டின மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசின் இதுபோன்ற தொடர் அத்துமீறல்களை மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு, எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூர சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். கூலிப்படையினரே நாட்டில் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து அணைகளையும் பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்து, மதகு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கந்துவட்டிப் பிரச்னைகளை தனிக் குழு அமைத்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரசு வளர்ச்சிப் பாதைக்கான அடித்தளப் பணியை மேற்கொண்டு, எந்த கட்சியுடனும் கூட்டணியின்றி தனித்துவமாக செயல்பட்டு வருகிறது.

ஆர்.கே.நகரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில், சட்டத்துக்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது நிலவும் குழப்பமான அரசியல் சூழலில், ஆய்வு மேற்கொள்வதை ஆளுநர் தவிர்த்திருக்கலாம். எனினும், அவர் மீனவர்களைச் சந்தித்தது போன்ற நடவடிக்கைகள் வரவேற்கக்கூடியதே" என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின்போது மாநிலத் துணைத் தலைவர் பிஆர்எஸ்.வெங்கடேசன், மாவட்டத் தலைவர் வி.தசரதன், நகரத் தலைவர் எஸ்.ஹரிபாபு, பொருளாளர் சதீஷ்பாபு, பொதுச் செயலர் ரஞ்சித்குமார், மாவட்டச் செயலர்கள் பார்த்திபன், இசைமாறன்,

மாநில நிர்வாகிகள் ஆர்.ஜெயபாலன், நத்தர்மொய்தீன், அதையூர் பாண்டியன், சங்கர், வானூர் முத்து, கண்டமங்கலம் ஜெயமூர்த்தி, ராஜேந்திரன், ராஜகண்ணன், கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.