காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
மாமல்லபுரத்தை அடுத்த காரணையில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவிடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உயிரிழந்த ஜான்தாமஸ், ஏழுமலை ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். உயர்மட்ட குழு அமைத்து, அந்த குழு காவிரி பிரச்சனை குறித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவித்துள்ளார்கள்.
எத்தனை குழுக்கள் அமைத்து, என்ன அறிக்கை தாக்கல் செய்தாலும் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் விளைவித்து, கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று மீண்டும் ஆட்சி பொறுப்பை கவனிக்க வேண்டும் என்பது அனைவரின் பொது கருத்தாக உள்ளது. துணை முதல்வரை நியமிக்கும் அதிகாரம் முதல்–அமைச்சருக்கு மட்டுமே உண்டு. கவர்னருக்கு அதிகாரம் இல்லை”. என்று அவர் கூறினார்.
