நடுக்கடலில் மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மீன் இனப்பெருக்கத்திற்காக ஏப்.15 முதல் மே 29 தேதி வரை, விசைப்படகில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. நாட்டுபடகில் மீன்பிடிக்க தடை இல்லாததால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர்.ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் இருந்து கடந்த  30 ஆம் தேதி அடிமை என்பவரது நாட்டுப் படகில் அபிஷேக், அந்தோணி, ஆரோக்கியம், சந்தியா, ராஜகுணசேகரன் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். 
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து ஹவானியா சிறையில் அடைத்தனர். 
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.