தூத்துக்குடி

தமிழக அரசை மத்திய அரசு வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்று சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அதிரடியாக தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து, “தமிழக அரசு மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துவதில்லை.

நீட் தேர்வு விவகாரத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக சில வாக்குறுதிகளை அளித்து தமிழக மாணவ, மாணவிகளை சோகத்தில் ஆழ்த்திவிட்டனர்.

விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேகதாட்டுவில் அணைக் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தண்ணீர் கொடுத்தால் போதும் அணை கட்டிக் கொள்ளலாம் என தற்போதைய அரசு கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டே தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழக அரசை மத்திய அரசு வழிநடத்திக் கொண்டிருக்கிறது.

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக தற்போதைய அரசு உள்ளது.

தமிழகத்தில் தற்போது குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில் உடனடியாக சட்டப் பேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டியது ஆளுநரின் பொறுப்பு” என்று அவர் தெரிவித்தார்.