Asianet News TamilAsianet News Tamil

கனமழை பாதிப்பு… நவ.21 அன்று தமிழகம் வருகிறது மத்திய குழு!! | Tamilnadu Rain

#Tamilnadu | மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய வருகிற 21ம் தேதி மத்திய குழு தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Central Committee is coming to Tamilnadu on nov.21
Author
Tamilnadu, First Published Nov 19, 2021, 4:04 PM IST

மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய வருகிற 21ம் தேதி மத்திய குழு தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. மேலும் பல பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. இதனால், மாநிலம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதை அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்.

Central Committee is coming to Tamilnadu on nov.21

மேலும் பாதித்துள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நேற்று முன்தினம் நேரில் சந்தித்து, கோரிக்கை மனு வழங்கினார். அதில், தமிழகத்திற்கு உடனடியாக மழை வெள்ள நிவாரண நிதியாக தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.2079 கோடியை வழங்கும்படி கோரினார். அதில், உடனடியாக ரூ.550 கோடியை வழங்கும்படியும் வலியுறுத்தினார். மனுவை பரிசீலனை செய்த அமித்ஷா தமிழக மழை வெள்ளத்தை பார்வையிட 6 பேர் கொண்ட ஒன்றிய அரசின் குழுவை அனுப்பி வைப்பதாகவும், அவர்கள் சேதங்களை பார்வையிட்டு அறிக்கை அளித்த பிறகு அதன் அடிப்படையில் நிதி  வழங்குவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு தமிழகம் செல்கிறது.

Central Committee is coming to Tamilnadu on nov.21

இந்த  குழுவில் ஒன்றிய அரசின் விவசாயம், உழவர் நலன், நிதி, நீர்வளம், மின்சாரம், சாலை, போக்குவரத்து மற்றும் ஊரக வளர்ச்சி ஆகிய 6 துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் இடம் பெறுவார்கள். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதித்த அனைத்து பகுதிகளையும் இக்குழு சென்று பார்வையிடும். விவசாய பாதிப்பு, கால்நடை உயிரிழப்பு, மனித உயிரிழப்புகள், பயிர்கள், தோட்டங்கள் பாதிப்பு, குடிசை மற்றும் கட்டிட வீடுகள் பாதிப்பு, மின்சாதனங்கள் பழது போன்றவை குறித்து விரிவாக ஆய்வு செய்ய உள்ளது. அடுத்த வாரம் விரிவான அறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் நிர்வாகம் ஆகியவற்றிடம் இக்குழு தாக்கல் செய்யும். அதனை அடிப்படையாக கொண்டு தமிழகத்திற்கு நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய வருகிற 21 ஆம் தேதி மத்திய குழு தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா, நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கவுல் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு தமிழகம் வரவுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios