திருவள்ளூர்

விதிமுறைகளை பின்பற்றியும், சுற்றுச்சூழலை பாதிக்காதவாறும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்று ஆட்சியர் சுந்தரவல்லி வேண்டுகோள் வைத்தார்.

வருகிற 25–ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்

டம் திருவள்ளூரில் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். அப்போது அவர், “திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

கடல், ஆறு மற்றும் குளம் போன்றவை நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. எனவே நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களாக திருவள்ளூர் காக்களூர் ஏரி, திருவள்ளூர் எம்.ஜி.ஆர். நகர் டேங்க் அருகே, மப்பேடு கூவம் ஏரி, வெள்ளவேடு திருமழிசை குளம், ஊத்துக்கோட்டை குளம், பெரியபாளையம் சீத்தஞ்சேரி, வெங்கல் கொசஸ்தலை ஆறு, திருத்தணி காந்திசாலை குளம், ஆர்.கே.பேட்டை வண்ணான்குளம், பள்ளிப்பட்டு கரிம்பேடு குளம், பொதட்டூர்பேட்டை பாண்டரவேடு குளம், திருவாலங்காடு பராசக்திநகர் குளம், கனகம்மாசத்திரம் குளம், கும்மிடிப்பூண்டி ஏழுகண் பாலம், மீஞ்சூர் பக்கிங்காம் கால்வாய், திருப்பாலைவனம் பழவேற்காடு ஏரி, சீமவரம் கொசஸ்தலை ஆறு ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எந்தவித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி, தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலையில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.

நீரில் கரையும் தன்மையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளை கடலுக்குள் குறைந்தது 500 மீட்டர் தூரம் எடுத்து சென்று கரைக்க வேண்டும். ஏற்கனவே கூறிய வழிகாட்டுதல் மீறப்படாமல் இருப்பதை கண்காணிக்க வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலர்கள் மற்றும் காவலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்” என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, அம்பத்தூர் மாசுகட்டுப்பாட்டு அலுவலர் வாசுதேவன், திருவள்ளூர் மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர் பிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சக்திவேல், திருவள்ளூர் தாசில்தார் திவ்யஸ்ரீ மற்றும் திரளான அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.