CCTV cams on trains to keep women safe

சென்னை புறநகர் மின்சார ரெயலில் முதல்முறையாக பெண்களின் பாதுகாப்புகாக பெண்களுக்கான பெட்டிகளில் கண்காணிப்பு கேமிராக்களை தெற்கு ரெயில்வே பொருத்தியுள்ளது.

சென்னை ரெயில்வே கோட்டத்தில், சென்னை கடற்கரை-தாம்பரம், சென்ட்ரல்-திருவள்ளூர், திருத்தனி என 5 வழித்தடங்களில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரெயில்களில் நாள்தோறும் ஏறக்குறைய 3.50 லட்சம்பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் புறநகர் ரெயில்களில் இரவு நேரங்களில் பெண்கள் மட்டும் பயணிக்கும் பெட்டிகளில் சமூக விரோதிகள், குடிமகன்கள் சிலர் ஏறிக்கொண்டு மிரட்டல் விடுப்பதும், திருட்டு, நகைப்பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. பெண்களும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் இருந்தது.

இதனால், ரெயில்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த பெண்கள் தரப்பில் இருந்து ரெயில்வே மேலாளருக்கு கோரிக்ைக எழுந்தது.

இதையடுத்து, புறநகர் ரெயில்களில் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்லும் ரெயில்களில் பெண்கள் பயணிக்கும் பெட்டிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டம், நேற்றுமுதல் சென்னை மூர் மார்க்கெட் நிலையம் முதல் ஆவடி, கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரெயில்களில் பொருத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் செல்லும் ரெயில்களில் பெண்கள் மட்டும் பயணிக்கும் 2 பெட்டிகளில் 4 கண்காணிப்பு கேமிராக்கள் ரூ.70ஆயிரம் மதிப்பில் பொருத்தப்பட்டுள்ளன. நிர்பயா நிதியில் இருந்து இந்த கேமிராக்கள் பொருத்த மத்தியஅரசு நிதி உதவி செய்துள்ளது

இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையின் மூத்த மண்டல பாதுகாப்பு ஆணையர் கே.கே.அஸ்ரப் கூறுகையில், “ கண்காணிப்பு கேமிராவில், டிஜிட்டல் தெளிவுடன் படங்களை பதிவுசெய்யும் லென்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமிராக்கள் மூலம் பெண்கள் பெட்டியில் நடக்கும் சம்பவங்களை துல்லியமாக பதிவு செய்ய முடியும்.

இந்த கேமிரா பொருத்தப்பட்டு இருப்பதன் மூலம் இனி பெண்கள் பயணிக்கும் பெட்டிகளில் திருட்டு, தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் குறையும் என எதிர்பாரக்கிறோம். இப்போது ரெயில்வோ பாதுகாப்பு படையினர் ரோந்து மட்டும் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் செல்லும் ரெயில்களில் பெண்களுக்கு சிலர் தொந்தரவு கொடுப்பதாக வந்த புகார்களையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண்களின் சுதந்தரத்தை கருதி கேமிராக்களை கட்டுப்பாட்டு அறையுடன்இணைக்கவில்லை. இந்த கேமிராக்கள் 20 நாட்களுக்கு படங்களை பதிவு செய்யும் திறன் கொண்டவை. அதன்பின், பென்டிரைவ் மூலம் இதில் உள்ளபடங்களை அதிகாரிகள் மாற்றிக்கொள்வார்கள்.

ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் ஆய்வுசெய்து, குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஒவ்வொரு வாரமும் இந்தகேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.