CBCID official inquiry in subramaniyan death case

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் கான்ட்ராக்டர் நாமக்கல் சுப்பிரமணியம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அதிகாரிகள் தரப்பில் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. ஆனால், சுப்பிரமணியம் அதை மறுத்தார். தனது வீட்டிலும், அலுவலகத்திலும் எந்த ஆவணமும் அதிகாரிகள் கைப்பற்றவில்லை என கூறினார்.

இதையடுத்து அவரை விசாரணைக்கு அழைத்தனர். அதிகாரிகள் விசாரணைக்காக அடிக்கடி அழைப்பதால், மன உளைச்சல் அடைந்த சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது, அவர் எழுதி வைத்த கடிதத்தை, அவரது உறவினர்கள் போலீசாரிடம் கொடுத்தனர். அதில், தனக்கும் அமைச்சருக்கும் எந்த தொடர்பும் இல்லை. வருமான வரிசோதனை திட்டமிட்ட சதி.

இதற்கு முழு காரணம், கான்ட்ரக்டர் தென்னரசு, விசாரணை அதிகாரி கார்த்திக் ஆகியோர் என குறிப்பிட்டு இருந்தார். மேலும், தொழில் போட்டி காரணமாக தென்னரசு தனக்கு பல்வேறு தொல்லைகளும், இடையூறுகளும் செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, அவரது செல்போனை கைப்பற்றி அதில் வந்த அழைப்புகளையும் ஆராய்ந்தனர். அதில் அமைச்சர் ஒருவருடன் அவர் பேசியது தெரிந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக சத்தியமூர்த்தியை நியமித்துள்ளனர்.

இதைதொடர்ந்து சுப்பிரமணியத்தின் உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலரிடம் விசாரிக்க சிபிசிஐடி அதிகாரி சத்தியமூர்த்தி முடிவு செய்துள்ளார். இதில், அரசியல் பிரமுகர்கள் சிலர் விரைவில் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.