விசாரணை கைதி மர்ம மரண விவகாரம்... நாளை முதல் சிபிசிஐடி விசாரணை!!
சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேக மரணம் வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் நாளை தொடங்க உள்ளனர்.
சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேக மரணம் வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் நாளை தொடங்க உள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை கடந்த 18ம் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் தலைமையிலான தலைமைச் செயலக காலனி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது விக்னேஷிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு சந்தேகமான முறையில் இறந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாளை சிபிசிஐடி இந்த வழக்கு விசாரணையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. சிபிசிஐடி டிஎஸ்பி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார். முதற்கட்டமாக சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்டு விக்னேஷ் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட அயனாவரம் காவல் நிலையம், தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளனர். வழக்கு ஆவணங்களை கைப்பற்ற சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் சம்மன் கொடுத்து நேரில் வரவழைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த சந்தேக மரணம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை இறந்து போன விக்னேஷின் குடும்பத்தினர் முன்வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இறப்பை மறைக்க மறைமுகமாக காவலர்கள் 1 லட்சம் ரூபாய் கொடுத்ததாக காவல் நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷின் சகோதரர் தெரிவித்த தகவல் காவல்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விக்னேஷின் உடலை பார்த்த போது முகத்தில் காயம் இருந்துள்ளது. போலீசார் தாக்கிய காயம் அது என குற்றம் சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஆட்சியர் மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சாத்தான்குளம் சம்பவம் போல இந்த மரணம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையை கையில் எடுக்க உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.