CB-CID gets custody of Tamil Nadu college assistant professor Nirmala Devi

விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு பேராசிரியை நிர்மலாதேவியின் மாமனார் பாண்டியன், கணவர் சரவண பாண்டியன் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி முன்னாள் செயலாளர் சவுண்டையா ஆகிய 3 பேரையும் நேற்று இரவு வரவழைத்து சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி தீவிர விசாரணை நடத்தினார்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியையாக இருக்கும் நிர்மலா தேவி. கடந்த சில தினங்களாக ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில், மாணவிகளிடம் பேசிய பேராசிரியை, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சில அதிகாரிகள் உள்ளனா். அவர்களின் விருப்பத்திற்கு நீங்கள் சம்மதம் தெரிவித்தால் உங்களை அவா்கள் அடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்வார்கள். அதுமட்டுமல்லாமல் மாதா மாதம் உங்கள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்படும் என்று பேசி மாணவிகளை பெரிமநிதர்களின் படுக்கைக்கு அனுப்ப புரோக்கராக மாறியிருந்த விஷயம் கேட்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிர்மலா தேவிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்ததால், கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதையடுத்து, சிபிசிஐடிக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டு, கடந்த புதன்கிழமை இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன.

அதையடுத்து, நேற்று முன்தினம் 5 நாள் காவலில் எடுத்து நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று காலை 11.45 மணியளவில் நிர்மலாதேவியின் சகோதரர் ரவி, விருதுநகர் சிபிசிஐடி அலுவலகம் வந்தார். அவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், மதியம் 3 மணியளவில் அவரை அழைத்துக் கொண்டு, அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியில் உள்ள நிர்மலாதேவி விட்டிற்கு சென்று பணபரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா என சோதனை நடத்தினர்.

சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழுவினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3வது நாளாக நேற்று காலை 11 மணிக்கு பதிவாளர் சின்னையா அறைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அவரிடம் பகல் 12.30 மணி வரை விசாரணை நடந்தது. சிபிசிஐடி டிஎஸ்பி கருப்பையா தலைமையில் மற்றொரு குழுவினரும் பதிவாளரிடம் விசாரணையை தொடர்ந்தனர். பின்னர் அகடமிக் ஸ்டாப் காலேஜ் அலுவலக அறையில் இயக்குநர் கலைச்செல்வனிடம் விசாரணை நடத்தினர்.

அங்கு நடத்திய சோதனையில் சிக்கிய சில ஆவணங்களுடன், மீண்டும் பதிவாளர் அறைக்கு சென்று நேற்றிரவு வரை, தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அகடமிக் ஸ்டாப் காலேஜ் இயக்குநர் கலைச்செல்வன் கூறும்போது, ‘‘ விருந்தினர் விடுதியில் ஒருநாளைக்கு ரூ.125 வாடகையில் 9 நாட்கள் நிர்மலாதேவி தங்கியதற்கு செலுத்திய தொகை ரூ.1,125க்கான ரசீது நகல் உள்ளிட்ட ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் பெற்றுச் சென்றனர்.

மேலும், அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி காவியன் நகரில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத் தத் திட்டமிட்டு அங்கு சென்றனர். நிர்மலா தேவியின் சகோதரர் ரவி, வீட்டைத் திறந்து காட்டினார். அதையடுத்து, வீட்டுக்குள் நுழைந்த போலீஸார் 6 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் சில டைரிகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பாக விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு பேராசிரியை நிர்மலாதேவியின் மாமனார் பாண்டியன், கணவர் சரவண பாண்டியன் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி முன்னாள் செயலாளர் சவுண்டையா ஆகிய 3 பேரையும் நேற்று இரவு வரவழைத்து சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி தீவிர விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.