Asianet News TamilAsianet News Tamil

காவிரி நதி நீர் பங்கீடு... மேகதாது விவகாரம்: டெல்லி செல்லும் துரைமுருகன்!

காவிரி நீர் திறப்பது, மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்லவுள்ளார்

Cauvery water mekedatu issue duraimurugan to visit delhi
Author
First Published Jul 4, 2023, 11:40 AM IST

கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும்  இடையே, காவிரி நீர் வரத்து, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை உள்ளது. உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் பல்வேறு அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தாலும் கர்நாடக அரசு அதனை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரங்களில் கர்நாடகாவை ஆளும் எந்த அரசாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருவதாக கூறுகிறார்கள்.

காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க உத்தரவிட்டது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் காவிரி நதி நீர் திறந்து விடப்படுகிறது. ஆனாலும், தமிழகத்துக்கான நீர் வரத்தை கர்நாடகம் தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது.

அதேபோல், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு எனும் பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரிய அனுமதி இல்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் இருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரினை வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிடுங்கள்.! தமிழ்நாடு அரசு பரபரப்பு கடிதம்

இதனிடையே, கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தமிழகத்திற்கு காவிரி நீரை தர முடியாது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இதையடுத்து, காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்கு பிறகு தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி முறியடிக்கப்படும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மேகதாது அணை விவகாரத்தில் தக்க நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சக்சேனா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9.20 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரும் கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால் ஜூன் மாதத்தில் வெறும் 2.7 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் வழங்க கர்நாடகாவுக்கு அறிவுறுத்த வேண்டும். காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காவிரி நீர் திறப்பது, மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்லவுள்ளார். டெல்லியில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து மேகதாது விவகாரம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

முன்னதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் 2.83 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே  வழங்கப்பட்டது. ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை வழங்காததால் 6.357 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசுடன், கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம். மேகதாது அணை ஏன் கூடாது என்பதை காரணத்தோடு கர்நாடகாவிடம் விளக்குவோம்.” என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios