தமிழகத்தின் தொடர் அழுத்தம்..! கர்நாடக அணையில் இருந்து காவரியில் தண்ணீர் திறப்பு- விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணையில் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தமிழக அரசு தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூரில் குறைந்த தண்ணீர்
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி மிகவும் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த மூன்று வாரங்களுக்கு மட்டுமே தண்ணீரை திறக்கும் அளவிற்கு மேட்டூர் அணையில் நீர் இருப்பு உள்ளது. மேலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், இன்று (ஜூலை 20)வரை காவிரியில் தமிழ்நாட்டிற்கு 31.12 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் சுமார் 10% அளவுக்கு 3.72 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியிருக்கிறது. 27.40 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு நிலுவையில் வைத்திருக்கிறது. மேட்டூர் அணையில் 70 அடிக்கும் குறைவான நீர் மட்டுமே உள்ளது. , அதில் குடிநீர் தேவை, குறைந்தபட்ச நீர் இருப்பு ஆகியவை போக 22 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே பாசனத்திற்காக திறந்து விட முடியும்.
விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்குமா.?
ஒரு நாளைக்கு ஒரு டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படுவதாக வைத்துக் கொண்டால், அடுத்த 22 நாட்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 10-ஆம் நாள் வரை மட்டுமே காவிரியில் தண்ணீர் திறக்க இயலும். இதனையடுத்து விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி விவசாயிகளின் மத்தியில் எழுந்தது. இதனையடுத்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாகவும் கர்நாடாக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதன் எதிரொலியாகவும், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணைக்கான நீர் வரத்து 7914 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 2487 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
கபினி, கேஆர்எஸ்யில் இருந்து தண்ணீர் திறப்பு
கபினி அணையின் நீர் வரத்து 7886 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 2500 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 4987 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கூடுதல் நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்