cauvery water came to mettur dam
ஒரு வழியா மேட்டூர் வந்தடைந்தது காவேரி தண்ணீர்….குடிநீர் பிரச்சனையாவது தீருமா?
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுவை வந்தடைந்த நிலையில் தற்போது மேட்டூர் வந்துள்ளது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் கொஞ்சம்,கொஞ்சமாக உயர்ந்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் விதமாக தண்ணீர் திறந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
ஆனால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 30-ந் தேதி திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இதையடுத்து தற்போது தண்ணீர் மேட்டூர் அணை வந்தடைந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 20.09 அடியாக இருந்த நிலையில் . அதாவது அணைக்கு வினாடிக்கு 37 கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து நேற்று மதியம் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததின் மூலம் பண்ணவாடியில் பரிசல் போக்குவரத்து கடந்த 2 மாதத்துக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.. சிலர் பரிசலில் சென்று இயற்கை அழகை ரசித்தனர்.

வழக்கமாக ஜுன் 12 ஆம் தேதி விவசாயத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக அணையில் தண்ணீர் இல்லாததால் திறந்து விடப்படவில்லை.
தற்போது காவிரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படவில்லை என்றாலும், குடிநீருக்காகவாவது உதவும் என டெல்டா பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
