Cauvery Mahabushkarani ceremony ends today

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மகாபுஷ்கரம் விழா இன்றுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சியின் போது குரு பகவான் எந்த ராசிக்கு பெயர்கிறதோ அந்த ராசிக்கான நதியில் புஷ்கர விழா நடைபெறுகிறது.

அந்த வகையில் கன்னியிலிருந்து துலாம் ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்வதால் துலாம் ராசிக்கு உரிய காவிரி நதியில் மகாபுஷ்கர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி வருகின்றனர். ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் 2 லட்சம் பக்தர்கள் நேற்று புனிதநீராடினர். இதுவரை சுமார் 15 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

நிறைவு நாளான இன்று, விடையாற்றி உற்சவமும், துவஜா அவரோகணம் நடக்கிறது. இன்று இறுதி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காவிரி மகாபுஷ்கர விழாவில் கலந்துகொண்டு அண்மையில் முதல்வர் பழனிச்சாமியும் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், கருப்பண்ணன் ஆகியோரும் புனித நீராடினர்.