மத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்திக்கும் தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள்!
காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்கவுள்ளனர்

தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நீரை கர்நாடகம் உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் அடங்கிய குழு மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரை சந்தித்து மனு அளிக்கவுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரை நாளை மாலை சந்திக்கும் இக்குழுவினர், கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை அளித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தவுள்ளனர்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் காவிரி நீர் விவகாரத்தில் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள் பட்டியலில், திமுகவின் டி.ஆர்பாலு, காங்கிரசின் ஜோதிமணி, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் சந்திரசேகரன் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பாமக இலவு காத்த கிளியல்ல: ராமதாஸ் ஆவேசம்!
மேலும், மதிமுகவின் வைகோ, விசிகவின் திருமாவளவன், பாமகவின் அன்புமணி, தமாகாவின் ஜி.கே.வாசன், சுப்பராயன்(சிபிஐ), ஆர்.நடராசன்(சிபிஎம்), சின்னராஜ்(கொமதேக), நவாஸ் கனி (இ.யூ.மு.லீ) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி நதி நீர் தொடர்பாக பிரச்சினை அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை தமிழ்நாட்டுக்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், இதுகுறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இருப்பினும், தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விட முடியாது எனவும், குறைவான நீரையே திறந்து விடுவோம் எனவும் கர்நாடகம் விடாப்படியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்கவுள்ளனர்.