காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருபெரும்புதூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

"காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தை (சிவில்) சேர்ந்த வழக்கறிஞர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருபெரும்புதூர் நீதிமன்றம் எதிரே நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் செல்வமணி தலைமை வகித்தார். 

சங்கத்தின் செயலாளர் அர்ஜுனன், நிர்வாகிகள் வேல்முருகன், ராஜவேல், பெருமாள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். 

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த திருபெரும்புதூர் காவல் ஆய்வாளர் நடராஜ் வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர். 

வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டத்தால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.