காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரியும் மாடுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி, வேலூர், அரக்கோணம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, தண்டலம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் மேற்கண்ட நெடுஞ்சாலைகளின் ஊராட்சிப் பகுதிகளில் ஆடு, மாடுகள் ஆங்காங்கே திடீரென குறுக்கிடுகின்றன. இதனால், விபத்து, போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சாலையில் நின்று கொண்டிருக்கும் மாடுகளை வாகனங்கள் கடக்கும்போது, அவை மிரள்வதால், பெருமளவில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
இதுபோன்ற விபத்தில் தொழிலாளி பாதிக்கப்பட்டால், மருத்துவச் செலவு மட்டுமல்லாமல், அவர் குணமாகும் வரை அந்த குடும்பத்துக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
கட்டற்றுத் திரியும் கால்நடைகளால் விபத்துகள் நேரிடும்போது, அவற்றின் உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தால்தான் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க முடியும். மேலும், இந்த கால்நடைகளுக்கு உரிமையாளர்கள் இருக்கின்றனரா என்பதும் சந்தேகமே.
கார், லாரி போன்ற வாகனங்களில் அடிபட்டு மாடுகள் இறந்தால் மாட்டின் உரிமையாளர், வாகனங்களை ஓட்டிவந்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து காவல்துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
