கடலூர்

கடலூரில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக் கோரி மாட்டுவண்டித் தொழிலாளர்கள் முட்டிப்போட்டு மனு கொடுத்தனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் உள்ள மணிமுக்தாறு மற்றும் வெள்ளாற்றில் பல்வேறு இடங்களில் மாட்டு வண்டி மணல் குவாரிகள் இயங்கி வந்ததன் மூலம் விருத்தாசலம் பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் பயனடைந்து வந்தனர்.

இந்த நிலையில், மணிமுக்தாறு, வெள்ளாற்றில் இயங்கி வந்த மாட்டு வண்டி மணல் குவாரிகளை மாவட்ட நிர்வாகம் மூடியதால் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இதனையடுத்து அவர்கள் மூடப்பட்ட மாட்டு வண்டி மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் நேற்று அரசக்குழி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் வெற்றிவேல் தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள், மூடப்பட்ட மாட்டு வண்டி மணல் குவாரிகளை மீண்டும் திறக்க கோரி அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்காக அலுவலக முகப்பில் இருந்து முட்டிப்போட்டப்படி அலுவலகம் நோக்கிச் சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.

இதனையடுத்து தொழிலாளர்கள் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை பெற்ற கோட்டாட்சியர், அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து அமைதியாக புறப்பட்டு சென்றனர்.