cat briyani in chennai
சென்னையில் அடிக்கடி காணாமல் போகும் பூனைகள் பிரியாணி ஆவது குறித்து விலங்குகள் நலஆர்வலர்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ஷமீம் பானு. இவரின் 2 பூனைக் குட்டிகள் திடீரென காணாமல் போகின. மேலும், இவரின் வீட்டுக்கு அடிக்கடி இரவில் வரும் 6-க்கும் மேற்பட்ட பூனைகளும் திடீரென காணவில்லை.
இதையடுத்து விலங்குகள் நல ஆர்வலர்கள், அருகில் வசிக்கும் சிலர் ஆகியோரின் உதவியுடன் கடந்த 19-ந்தேதி பல்லாவரம் போலீசில் புகார் அளித்தார்.
நாங்கள் வளர்க்கும் பூனைகளை சில நாட்களாக காணவில்லை. எங்கள் வீட்டுப்பகுதியில் சுற்றித்திரியும் வீட்டுப் பிராணிகளையும் காணவில்லை. எங்களுக்கு நரிக்குறவர்கள் மீது சந்தேகம் இருக்கிறது என போலீசில் பானு புகார் அளித்தார்.
அந்த பகுதியில் வசிக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் 26 வயதான ஆர். வெங்கடேஷ் கூறுகையில், “ எங்கள் பகுதியில் 12-க்கும் மேற்பட்ட பூனைகள் தினந்தோறும் சுற்றித்திரியும். அதற்கு உணவு வைத்துக்கொண்டு இருந்தோம். இப்போது 2 முதல் 3 பூனைகள் மட்டுமே இருக்கின்றன. மற்றவற்றை காணவில்லை.
பல்லாவரத்தில் நரிக்குறவர்கள் குடில் அமைத்து தங்கத் தொடங்கியபின்பு தான், பூனைகள் காணமல் போகின. அவர்கள் பகுதிக்கு சென்று பார்த்தபோது, 3 பூனைகளை கூண்டுக்குள் அடைத்துவைத்து இருந்ததை பார்த்தேன்.
அந்த பூனைகளை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, அதை விலைக்கு கேட்டேன். ஆனால், அந்த நரிக்குறவர்களில் மது அருந்தி இருந்த ஒருவர், அந்த பூனைகள் பிரியாணி செய்ய வைக்கப்பட்டு இருக்கின்றன” என்று தெரிவித்தார்.
விலங்குகள் நல அமைப்பினர் போலீசாரின் உதவியுடன் கடந்த 2016ம் ஆண்டு பல்லாவரம் பகுதியில் சென்று நரிக்குறவர்கள் பகுதியில் இருந்த 16 பூனைகளை உயிருடன் மீட்டனர்.
பீப்பில்ஸ் பார் அனிமல்ஸ்(பி.எப்.ஏ.) அமைப்பின் அதிகாரி சிரானி பெரேரா கூறுகையில், “ கடந்த ஆண்டு இதேபோல் போலீசாரின் உதவியுடன், பல்லாவரம் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்த 16 பூனைகளை மீட்டோம். அந்த பூனைகள் கூண்டுக்கள் அடைக்கப்பட்டு, உடல் நலம் மோசமாக இருந்தன.
நரிக்குறவர்களுக்கு பூனைகளின் கறி விருப்பமாகும். இதற்காக, பல்லாவரம் பகுதியில் சுற்றித்திரியும் ஒரு சில குடிகாரர்கள், பூனைகளை பிடித்து பல்லாவரத்தில் உள்ள ஒரு சில இறைச்சிக் கடைகளில் கொடுக்கிறார்கள்.
பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தையில் பூனைக் கறி வெளிப்படையாக விற்பனை செய்யப்படுகிறது, சில நேரங்களில் பிரியாணி செய்தும் விற்பனை செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
கேட்டிடியூட் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் தேவிகா கவிணி கூறுகையில், “ வீட்டில் வளர்க்கும் பூனைகளைக் காணோம் என்றுபல புகார்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வந்தவாறு இருக்கிறது.
ஆதலால், இரவில் செல்லப்பிராணிகளை வீட்டுக்குள் கொண்டு வந்து கட்டிப்போடவும் என நாங்கள் எச்சரித்துள்ளோம்.தனி வீடாக இருந்தால், கூண்டுக்குள் பூனைகளை அடைத்து வைக்கவும்அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.
இது குறித்து பரங்கிமலை போலீஸ் டி.சி.பி. பி.சி.எஸ். கல்யாண் கூறுகையில், “ எங்களுக்கு எந்த புகார் கிடைத்தாலும், உடனுக்குடன் நடவடிக்ைக எடுத்து அந்த விலங்குகளை மீட்டு வருகிறோம். அதேசமயம், மக்களிடம் இருந்து முழுமையான ஒத்துழைப்பு இருப்பது அவசியம். நரிக்குறவர்கள் பொருளாதாரம், சமூக ரீதியாக மிகவும் பின்தங்கிய மக்கள். அவர்களுக்கு மாற்று வழி, தகுந்த வாழ்க்கை வாழ ஏற்பாடு செய்ய அரசு நிர்வாகமும், தன்னார்வ அமைப்புகளும் முன்வர வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு, கவுன்சிலிங் போன்றவைகள் தரவேண்டும்” எனத் தெரிவித்தார்.
