கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பான வழக்கு... தமிழக அரசின் முடிவை கேட்ட உயர்நீதிமன்றம்!!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை திறக்க அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசின் முடிவை கூற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை திறக்க அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசின் முடிவை கூற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதை அடுத்து பள்ளிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள அனைத்தையும் உடைத்து பள்ளியை சூறையாடினர். இதில் பள்ளியில் இருந்த அனைத்தும் சேதமடைந்தது. இதனால் பள்ளி மூடப்பட்டது. பின்னர் பள்ளியை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதால் பள்ளியை திறக்க அனுமதிக்ககோரிய பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க: மின் கட்டணத்தை 10% குறைத்த தமிழக அரசு.. யாருக்கு, எவ்வளவு தெரியுமா ? முழு விபரம்
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும், அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா, சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா போன்ற கேள்விகள் எழுப்பியுள்ளதாகவும், தங்கள் பதிலில் ஆய்வுக்குழு திருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளித்து சாதனை படைத்த கோவை பெண்.. குவியும் பாராட்டுகள் !!
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் எனவும் அறிக்கை கிடைத்த பின்னர் அதுகுறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அடுத்த விசாரணையின்போது அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.